இயற்கை முறையில் வாழை சாகுபடி

நம் நாட்டில் பலவிதமான வேளாண் பருவநிலை நிலவுவதால், ஒவ்வொரு பகுதியிலும் அந்தந்தப் பருவத்துக்கேற்ற வாழை ரகங்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. பூவன், செவ்வாழை, ரொபஸ்டா, மொந்தன், கதலி, ரஸ்தாளி, விருப்பாச்சி பச்சைநாடன், நேந்திரம், கற்பூரவல்லி…
போன்றவை தமிழ்நாட்டில் வியாபார ரீதியாகப் பயிரிடப்படும் சில முக்கியமான ரகங்கள். ரகங்களைப் பொறுத்து சாகுபடி காலமும் மாறுபடும்.

தரமான விதைக்கிழங்கு அவசியம்.

வாழையை சுழற்சிப்பயிர், கலப்புப்பயிர், ஊடுபயிர், சார்புப்பயிர்… என அனைத்து வகையாகவும் பயிர் செய்யலாம். இதற்கு நீர்ப்பாசனம் அவசியம். விதைகள் மூலம் வாழைக்கன்றுகள் உருவாக்குவதில் பல சிக்கல்கள் இருப்பதால், பெரும்பாலும் விதைக்கிழங்கைப் பயிரிடுவதன் மூலமாகத்தான் சாகுபடி செய்யப்படுகிறது. தரமான விதைக்கிழங்குகளை நடவு செய்தால்தான் அதிகளவு விளைச்சலை ஈட்ட முடியும். அதாவது தேர்ந்தெடுக்கப்படும் விதைக்கிழங்கு நல்ல எடையுடன் (600 கிராமிலிருந்து 900 கிராம் வரை) இரண்டு மாத வயதுள்ள பக்கக் கன்றிலிருந்து தோண்டியதாக இருக்க வேண்டும். குறிப்பாக, ரசாயன உரம் மற்றும் பூச்சிகொல்லிகள் பயன்படுத்தப்படாத தாய்மரத்தில் இருந்து வந்திருக்க வேண்டும். அதில் முளைத்திருக்கும் இலை குறைந்த அகலத்துடன் கத்தி போல் இருக்க வேண்டும். அனைத்து விதைக்கிழங்குகளும் ஏறத்தாழ ஒரே அளவில் இருப்பது நல்லது.

ஜூன் மாதம் முதல் ஆகஸ்டு மாதம் வரை ஒரு பருவம்; செப்டம்பர் மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை ஒரு பருவம்; டிசம்பர் மாதம் முதல் ஜனவரி மாதம் வரை ஒரு பருவம் என வாழைக்கு மூன்று பருவங்கள். ஜூன் மாதத்தில் நடவு செய்த வாழை நல்ல வீரியத்துடன் வேகமாக வளரும். அக்டோபர் மாதத்தில் பயிர் செய்த வாழை மெதுவாகவும் ஒரே சீராகவும் வளரும்.

அதிக இடைவெளி அவசியம்

வழக்கமாக அதிக எண்ணிக்கையில் மரங்கள் இருக்க வேண்டும் என்பதற்காக 4 அல்லது 5 அடி இடைவெளியில் வாழை நடவு செய்வதைக் கடைபிடித்து வருகிறார்கள். ஆனால் இம்முறையில் அதிக மகசூல் கிடைக்காது. பல்வேறு ரகங்களை பலதரப்பட்ட வேளாண் பருவநிலை உள்ள நிலங்களில் வெவ்வேறு இடைவெளிகளில் நடவு செய்து நான் சோதனை மேற்கொண்டேன். அதில், அதிக இடைவெளி விட்டு சாகுபடி செய்த நிலத்தில் அதிக எண்ணிக்கை மற்றும் அதிக எடையும் கொண்ட பழங்கள் விளைந்தன. அதை வைத்துதான் நெட்டை ரகங்களுக்கு 8 அடி இடைவெளியும் மற்ற நாட்டு ரகங்களுக்கு 12 அடி இடைவெளியும் தேவை என உறுதிப்படுத்தியிருக்கிறேன். அதாவது ஒரு வாழைக்கு 30 சதுர அடி பரப்பளவு கொடுத்து பயிரிடும்போது ஒளிச்சேர்க்கை நன்கு நடைபெற்று விளைச்சல் அதிகரிக்கும். இந்த இடைவெளியில் நடவு செய்து கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் நிறைய விவசாயிகள் ஜீரோ பட்ஜெட் முறையில் சாகுபடி செய்து அதிக மகசூலை எடுத்திருக்கிறார்கள். ஒரு மரத்துக்கு 30 சதுர அடி இடைவெளி விடும்போது, ஒரு ஏக்கரில் 1,435 வாழைகளை நடவு செய்ய முடியும்.

இடைவெளியில் ஊடுபயிர்கள்

நிலத்தின் விளிம்பில் இருந்து 9 அடி இடைவெளியில் ஒரு வரிசை; அதில் இருந்து நான்கரை அடியில் அடுத்த வரிசை; அதில் இருந்து 9 அடியில் அதற்கடுத்த வரிசை; அதில் இருந்து நாலரை அடியில் அடுத்த வரிசை… இந்த வரிசைப்படி நடவு செய்ய வேண்டும். செடிக்குச் செடி நாலரை அடி இடைவெளி இருக்க வேண்டும். (பார்க்க, படம்) நாலரை அடி இடைவெளிப் பகுதியில் வெங்காயம், மிளகாய் மற்றும் பயறு வகைகளையும், 9 அடி இடைவெளிப் பகுதியில், பயறு, மிளகாய், வெங்காயம், துவரை, கம்பு, காய்கறி… போன்ற வீட்டுக்குத் தேவையான பயிர்களையும் ஊடுபயிராக சாகுபடி செய்யலாம். வாழை நடவு செய்யும் சமயத்திலேயே ஊடுபயிர்களையும் விதைத்து விட வேண்டும். விதைக்கிழங்கு மற்றும் ஊடுபயிர் விதைகள் ஆகியவற்றை பீஜாமிர்தத்தில் விதைநேர்த்தி செய்ய வேண்டியது அவசியம்.

சிறிய குழியே போதுமானது

வாழை விதைக்கிழங்குகளை 20 முதல் 25 செ.மீ. ஆழத்தில்தான் நடவு செய்ய வேண்டும். அதிக ஆழத்தில் பள்ளம் தோண்டக்கூடாது. சிறிய களைக்கொத்து மூலமாக கிழங்கின் அளவுக்கு குழி பறித்தால் போதுமானது. ஒவ்வொரு குழியிலும் ஒரு கையளவு எருவை இட்டு பின் கிழங்கை நடவு செய்ய வேண்டும்.

வாழை நடவு செய்தபின் காலி நிலப்பகுதி முழுவதிலும் மூடாக்கு இட்டு அதில் சிறிய துளை செய்துதான் ஊடுபயிர்களை விதைக்க வேண்டும். விதைத்தவுடன் ஜீவாமிர்தம் கலந்த நீரைப் பாசனம் செய்ய வேண்டும். அதன்பிறகு நிலத்தின் ஈரப்பதத்தைப் பொறுத்து பாசனம் செய்தால் போதுமானது. பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை பாசன நீரில் ஏக்கருக்கு 200 லிட்டர் என்ற அளவில் ஜீவாமிர்தத்தைக் கலந்து விட வேண்டும். அதிகமான அளவு ஜீவாமிர்தம் தயாரிக்க முடிந்தால், ஒவ்வொரு முறை பாசனம் செய்யும்போதும் கூட கலந்து விடலாம்.

ஊட்டத்துக்கு ஜீவாமிர்தம்

நடவு செய்து ஒரு மாதம் கழித்து, ஏக்கருக்கு 200 லிட்டர் தண்ணீருக்கு 20 லிட்டர் வடிகட்டிய ஜீவாமிர்தம் என்ற விகிதத்தில் கலந்து வாழை மற்றும் ஊடுபயிர்களின் மேல் தெளிக்க வேண்டும். இரண்டு மாதங்கள் கழித்து 200 லிட்டர் தண்ணீருக்கு 13 லிட்டர் வடிகட்டிய ஜீவாமிர்தம் என்ற அளவில் கலந்து தெளிக்க வேண்டும். மூன்று மாதங்கள் கழித்து 200 லிட்டர் தண்ணீருக்கு 20 லிட்டர் வடிகட்டிய ஜீவாமிர்தம் என்ற அளவிலும், நான்கு மாதங்கள் கழித்து 200 லிட்டர் தண்ணீருக்கு 6 லிட்டர் புளித்த மோர் என்ற அளவிலும் கலந்து தெளிக்க வேண்டும். நாட்டுப் பசு அல்லது நாட்டு எருமைப்பாலில் இருந்துதான் மோரைத் தயாரிக்க வேண்டும்.

ஏறத்தாழ நான்கு மாதங்களுக்குப் பிறகு பெரும்பாலான ஊடுபயிர்களை அறுவடை செய்து விட முடியும். அறுவடை முடிந்த பயிர்களின் கழிவுகள் அனைத்தையும் மூடாக்காக போட்டு விட வேண்டும். மூடாக்கிட்டால்தான் ஜீவாமிர்தத்தின் முழுப்பயனும் கிடைக்கும். பிறகு 6, 8, 10, 12ம் மாதங்களில் 200 லிட்டர் தண்ணீரில் 20 லிட்டர் வடிகட்டிய ஜீவாமிர்தத்தையும் 4 லிட்டர் தேங்காய்த் தண்ணீரையும் கலந்து தெளிக்க வேண்டும்.

தாய்மரத்தை வெட்டக்கூடாது

வாழை மரம் பூப்பதற்கு முன் வளரும் பக்கக் கன்றுகளை அழித்து விட வேண்டும். வாழை குலை தள்ளிய பிறகு குலைக்கு நேர் எதிர் திசையில் உள்ள பக்கக் கன்றை மட்டும் மறுதாம்பாக விட்டுவிட்டு மற்றவற்றை வெட்டிவிட வேண்டும். அதாவது குலை தெற்கு திசையில் இருந்தால், வடக்கு திசையில் உள்ள பக்கக் கன்றை வளர விட வேண்டும். அழிக்கும் கன்றுகளை அப்படியே மூடாக்காகப் பரப்ப வேண்டும். அதேபோல வாழைத்தாரை அறுவடை செய்யும்போது தாய்மரத்தை வெட்டாமல் அப்படியே விட்டுவிட வேண்டும். இலைகளை மட்டும் கழித்து மூடாக்காக இட வேண்டும்.

தாய்மரத்தில் உள்ள சத்துக்களை எடுத்துக் கொண்டு பக்கக்கன்று நன்கு வளரும். சிறிது நாட்களில் அது தானாகக் காய்ந்து சுருண்டு விடும். அதேபோல வாழை அறுவடை வரை மரத்தில் இருந்து இலைகளைக் கழிக்கவே கூடாது. காய்ந்த இலைகளைக்கூட அப்படியே விட்டு விட வேண்டும். தாய்மரத்தில் அறுவடை முடிந்த பிறகு மீண்டும் மூடாக்குகளுக்கு இடையில் துளை செய்து ஊடுபயிர் விதைகளை விதைத்து விட வேண்டும்.

சந்தையில் வாழையின் விலை அதிக ஏற்றத்தாழ்வுடன் இருப்பதால், ஒரே சமயத்தில் நிலம் முழுவதும் நடவு செய்யாமல் நிலத்தை நான்கைந்து பகுதிகளாகப் பிரித்து மூன்று மாத இடைவெளியில் ஒவ்வொரு பகுதி நிலத்திலும் வாழையை நடவு செய்தால் தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் அறுவடை செய்து கொண்டே இருக்கலாம். அதனால் நல்ல லாபத்தை ஈட்ட முடியும். ஜீரோ பட்ஜெட் முறையில் விளையும் வாழை அதிக சுவையோடு இருக்கும். அதிக நாட்கள் கெடாமலும் இருக்கும். அதனால் ஏற்றுமதி வாய்ப்புகளை எளிதில் பெற முடியும்.

19 thoughts on “இயற்கை முறையில் வாழை சாகுபடி

  1. rani

    Hi i want to know more about natural form vegetables cultivation .regards where i have to contact.pls give details

    1. admin Post author

      வணக்கம் ஐயா,
      விரைவில் உங்கள இணைகின்றோம்.
      நன்றி
      EnVivasayam Team

    1. admin Post author

      வணக்கம் ஐயா,
      உங்கள் ஆதரவை தொடர்ந்து எதிர்பார்கின்றோம்.
      நன்றி
      EnVivasayam Team

    1. admin Post author

      வணக்கம் ஐயா,
      நிச்சயமாக இயற்கை முறையில் சவுக்கை வளர்க்கலாம். உங்கள் ஊர் பற்றிய விவரங்களை envivasayam@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கவும்.
      நன்றி
      EnVivasayam Team

    1. admin Post author

      வணக்கம் ஐயா,
      வாழை என்ன ரகம், மண் வகை மற்றும் நீர் வசதி பற்றிய தகவல்களை கூறுங்கள்.
      நன்றி
      EnVivasayam Team

  2. Gajendran

    நன்றி ஐயா.
    வாழை இயற்கை விவசாயத்திற்கு இடுபொருள் பற்றி கூறுங்கள் ஐயா

    1. admin Post author

      வணக்கம் ஐயா
      மண்ணிற்கு தகுந்தவாறு தான் உரமிட வேண்டும். இல்லையேல் அது வீண் தான். உங்கள் ஊர் மற்றும் மண்ணின் வகை பற்றியும் வாழையின் வயது எவ்வளவு என்றும் கூறுங்கள்.
      நன்றி
      EnVivasayam Team

  3. Kishokumar Sivamoorthy

    நான் ஈழத்திலிருந்து பேசுகிறேன். எனது நிலத்தில் வாழை சாகுபடி செய்ய விரும்புகிறேன். தங்களது உதவி தேவை.

    1. admin Post author

      வணக்கம் ஐயா
      நிச்சயமாக உதவுகிறோம். உங்களது ஊர், மண்ணின் வகை மற்றும் கால நிலைகள் பற்றிய தகவல்களை envivasayam@gmail.com என்ற மினஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்
      நன்றி
      EnVivasayam Team

Leave a Reply