மரிக்கொழுந்து சாகுபடி

http://ta.vikaspedia.in/agriculture/ba4bb4bbfbb2bcdba8bc1b9fbcdbaab99bcdb95bb3bcd/b9abbeb95bc1baab9fbbf-ba4bb4bbfbb2bcdba8bc1b9fbcdbaab99bcdb95bb3bcd/copy_of_Untitled.jpg/@@images/image/preview

தவனம் என்றழைக்கப்படும் மரிக்கொழுந்து ஒரு நறுமணத் தாவரமாகும். இச்செடிகள் இவற்றின் மணமுள்ள இலைகளுக்காகவும், அதிலிருந்து தயாரிக்கக் கூடிய நறுமண எண்ணெய்க்காகவும் சாகுபடி செய்யப்படுகிறது.  மாலைகளிலும், மலர் செண்டுகளிலும் இதன் இலைகள் அவற்றின் நறுமணத்திற்காக அதிகம் பயன்படுத்தப்படுகிறது.   இதன் நறுமண எண்ணெய் அழகு சாதனப் பொருட்களுக்கு நறுமணமூட்டவும், வாசனைத் திரவியங்கள் தயாரிப்பிலும் பயன்படுத்தப்படுகிறது.  அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் கேக், புகையிலை மற்றும் பானங்களுக்கு நறுமணமூட்ட அதிக அளவில் உபயோகிக்கப்படுகிறது.

  • இந்தியாவில் காஷ்மீர், கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு, மஹாராஷ்டிரா மற்றும் ஆந்திரா மாநிலங்களில் சுமார் 1000  எக்டர் பரப்பளவில் பயிரிடப்படுகிறது. தமிழ்நாட்டில் சேலம், தேனி, திண்டுக்கல் மற்றும் மதுரை மாவட்டங்களில் பயிரிடப்படுகிறது.
  • மரிக்கொழுந்து ஓராண்டு வாழும் வகையை சார்ந்த பயிராகும்.  45-80 செ.மீ. உயரம் நேராக வளரக்கூடிய இச்செடிகள் சாம்பல் நிறம் கலந்த பச்சை வண்ண இலைகளை கொண்டது. பூங்கொத்தானது காப்பிட்டுலம் வகையைச் சார்ந்ததாகும்.  இருபாலினப் பூக்கள் நடுப்பாகத்திலும் பெண் பூக்கள் ஓரத்திலும் அமைந்திருக்கும்.
  • தவனத்தில் நெட்டை மற்றும் குட்டை என இரு வகைகள் உள்ளன.  அவற்றில் நெட்டை வகை சற்று உயரமாக (80 செ.மீ வரை) வளரும் தன்மையும், பிளவுபட்ட இலைகளையும், காலம் தாழ்ந்து பூக்கும் தன்மையும் கொண்டதாகும்.  குட்டை வகையில் அனைத்து இலைகளும் செடிகளின் அடிப்பாகத்திலும், மேல்பாகத்திலும் பிளவுபட்டு காணப்படும். சீக்கிரமாக பூக்கும் தன்மை கொண்டது.
  • தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்திலிருந்து பி கே எம்-1 மரிக்கொழுந்து எனும் மேம்படுத்தப்பட்ட இரகம் வெளியிடப்பட்டுள்ளது. இது உள்ளுர் இரகத்தில் (சின்னமனூர்) இருந்து தேர்வு செய்யப்பட்டதாகும். இதன் செடிகள் நேராகவும், அடர்த்தியாகவும் அதிக கிளைகளையும் கொண்டது.  இலைகள் வெள்ளை கலந்த பச்சை நிறத்துடன் காணப்படும். ஒரு செடியின் எடை சுமார் 38.65 கிராம் கொண்டதாக இருக்கும். ஒரு எக்டரிலிருந்து 16.78 டன் பச்சை தழை விளைச்சலாக கிடைக்கிறது.  இதன் மூலம் 20.32 கிலோ வாசைன எண்ணெய் கிடைக்கம்.  இந்த இரகம் சுமார் 145 முதல் 150 நாட்கள் வயதினைக் கொண்டதாகும்.  தமிழ்நாட்டில் வெப்ப மண்பல சமவெளிப் பகுதிகளுக்கு மிகவும் உகந்த இரகமாகும்.
  • இப்பயிர் வளம் செறிந்த செம்மன் நிலங்களிலும், நல்ல வடிகால் வசதியுள்ள வண்டல் நிலங்களிலும் நன்கு வளரும் மிதமான மழை, நல்ல சூரிய ஒளி, காலை பனி ஆகியவை நல்ல விளைச்சல் கிடைக்க உதவுகின்றன. பூக்கும் பருவத்தில் அதிக அளவு மழை மற்றும் வெப்பம் இருந்தால் கிடைக்கும் எண்ணெயின் அளவு குறைகின்றது.
  • மாலைகளுக்கு உபயோகிப்பதற்காக பயிரிடப்படும் மரிக்கொழுந்து விதைத்ததில் இருந்து இரண்டு மாதங்களுக்குள் அறுவடை செய்யபடுவதால் எந்த பருவத்திலம் சாகுபடி செய்யலாம். ஆனால், வாசனை எண்ணெய்க்காக நவம்பர் மாதம் முதல் பிப்ரவரி – மார்ச் வரை சாகுபடி செய்வது நல்லது. பின்பு மறுதாம்பு பயிரை ஏப்ரல் – மே மாதங்களில் அறுவடை செய்யலாம்.

சாகுபடி நுட்பம்

 

  • மரிக்கொழுந்து செடிகள் விதை முலம் உற்பத்தி செய்யப்படுகின்றன. ஒரு எக்டரில் விதைக்க 1.50 கிலோ விதை தேவைப்படும். விதைகள் மிகச்சிறயவை. விதைகள் முந்தன பருவத்து பயிரிலிருந்து எடுக்கப்பட்டதாக இருக்க வேண்டும். ஓராண்டுக்கு மேலான பழைய விதைகள் முளைப்புத் தன்மையை இழந்து விடுகின்றன.
  • நாற்றங்கால் பாத்திகள் 2 மீட்டர் நீளமும், 1 மீட்டர் அகலமும் உடையதாக அமைக்க வேண்டும். ஒரு பாத்திக்கு 5 கிலோ மக்கிய தொழுஉரம், 2 கிலோ வேப்பம் புண்ணாக்கு வீதம் இட்டு மண்ணோடு நன்றாக கலக்க வேண்டும். ஒரு எக்டர் நடவு செய்ய 1.5 கிலோ விதையை 500 சதுர மீட்டர் பரப்பளவுள்ள நாற்றங்காலில் விதைக்க வேண்டும். விதைப்பதற்கு முன் விதைகளை விதைநேர்த்தி செய்யவேண்டும் (1 கிலோ விதைக்கு 50 கிராம் சூடோமோனாஸ்).
  • விதைகளை 10 கிலோ மணலுடன் கலந்து, சுமார் 3 கிராம் விதை 1 சதுர மீட்டர் பரப்பளவில் விழுமாறு தூவி விதைக்க வேண்டும். பின்பு விதைகளை மணல் தூவி மூடவேண்டும். பூவாளி கொண்டு ஒரு நாளைக்கு இருமுறை வீதம் தண்ணீர் தெளிக்க வேண்டும். விதைத்த 3-4 நாட்களில் விதைகள் முளைக்க ஆரம்பிக்கும். விதைகளை 48 மணி நேரம் ஈரத்துணியில் ஊறவைத்து, முளைக்கட்டியும் விதைக்கலாம்.
  • நடவு  வயலை கட்டிகளின்றி நன்கு உழுது 2 ஒ 2 மீட்டர் அளவில் பாத்திகள் அமைத்துக் கொள்ளவேண்டும்.  விதைத்த 30 நாட்கள் கழித்து நாற்றுக்களை பிடுங்கி 15 ஒ 7.5  செ.மீ. என்ற அளவில் இடைவெளியிட்டு நடவேண்டும். அந்த சமயம் நாற்றுக்கள் சுமார் 10 – 12 செ.மீ. அளவு உயரமிருக்கும்.
  • மரிக்கொழுந்து பயிருக்கு எக்டருக்கு 15 டன் நன்கு மக்கிய தொழு உரம், 125 கிலோ தழை, 125 கிலோ மணி மற்றும் 75 கிலோ சாம்பல் சத்து உரங்கள் சிபாரிசு செய்யப்படுகிறது. முழு அளவு நன்கு மக்கிய தொழு உரம், மணிச்சத்து மற்றும் சாம்பல் சத்தினை அடியுரமாகவும், 50 கிலோ தழைச்சத்தினை நடவு செய்த 25வது நாளில் முதல் மேலுரமாகவும், பின்னர் 25 கிலோ தழைச்சத்தினை ஒவ்வொரு முறையும் அறுவடை செய்த பின்னர் மேலுரமாக இடவேண்டும்.
  • பொதுவாக இச்செடிகளை பூச்சி, நோய்கள் தாக்குவதில்லை. சாறு உறிஞ்சும் பூச்சிகளின் தாக்குதல் வேப்பெண்ணெயை நீரில் கலந்து மாலை வேளையில் தெளிக்கலாம்.
  • நாற்றங்காலில் நாற்றுக்கள் பூஞ்சாணத்தால் பாதிக்கப்பட்டு அழுகிவிடும். நாற்றுக்கள் மழை காலத்தில் உற்பத்தி செய்யாதிருந்தால் அழுகல் நோயை தவிர்க்கலாம்.
  • விதைத்த 5 – 6 மாதங்கள் வரை இப்பயிரை அறுவடை செய்யலாம்.  விதைத்த 45 வது நாளில் முதல் அறுவடையும், அதன் பின் 30 – 40 நாட்கள் இடைவெளியில் தொடர்ச்சியாக அறுவடையும் செய்யலாம்.
  • நல்ல விளைச்சல் பெறவும், அதிக அளவு எண்ணெய் கிடைக்கவும் அதிக அளவு பூ மொட்டுகள் விரிந்தவுடன் அறுவடை செய்ய வேண்டும். பொதுவாக பிப்ரவரி கடைசி மற்றும் மார்ச் மாதங்களில் அறுவடை செய்ய வேண்டும்.  செடிகளை தரையிலிருந்து சுமார் 10 செ.மீ.உயரம் விட்டு தழை வெட்ட வேண்டும்.  ஒரு எக்டரிலிருந்து 17 பசுந்தழையும், அவற்றிலிருந்து 12.50 கிலோ வாசனை எண்ணெயும் கிடைக்கிறது.

 

 

வாசனை எண்ணெய் எடுத்தல்

  • வாசனை எண்ணெய் எடுக்க மரிக்கொழுந்து செடிகளை அதிக அளவு பூ மொட்டுகள் வெளிவந்த பின்பு பிப்ரவரி மாத கடைசியில் அல்லது மார்ச் மாதம் அறுவடை செய்து 2-3 நாட்கள் காய வைக்க வேண்டும்.
  • காய்ச்சி வடிக்கும் முறையில் எண்ணெய் பிரித்தெடுத்தப்படுகிறது. வடிகலன் மிருதுவான இரும்பல் செய்யப்பட்டு அடிப்பாகத்தில், துளைகளோடு கூடிய உலோகத் தட்டை கொண்டிருக்கும்.  இதனுள் இலைகள் நெருக்கமாக இடைவெளியின்றி அடைக்கப்பட வேண்டும்.  இலைகளை அடைப்பதையும், எடுப்பதையும் இயந்திரங்கள் மூலமாகவும் செய்யலாம்.  இக்கலத்தின் மூடியை தேவைப்படும் போது தள்ளி வைத்துக் கொள்ளலாம். இலைகள் நெருக்கமாகவும் ஒன்று போலும், அசைக்கபட்டாவிட்டால் எண்ணெய் விளைச்சல் மிகவும் குறைந்துவிடும்.
  • கொதிகலனிலிருந்து வரும் நீராவி, ஆவியாக்குதல் முறையில் இலைகளிலிருந்து காய்ச்சி வடித்து வரும் எண்ணெயை, கண்டென்சர் கலங்கள் குளிர்வித்து அங்கிருந்து சேமிப்பு கலங்களுக்கு அனுப்புகின்றன.
  • இந்த எண்ணெய் தண்ணீரை விட எடை குறைவாக  இருப்பதாலும், தண்ணீரில் கரையாததாலும், மேலே மிதக்கின்றது. கீழே உள்ள நீர் அடியில் உள்ள வடிகுழாய் மூலமாக வெளியேற்றப்படுகிறது.
  • ஒருமுறை எண்ணெய் எடுக்க சுமார் 6-8 மணி நேரமாகின்றது.  எண்ணெய் எந்த விதமான கசடுகள் அல்லது மிதக்கும் பொருட்கள் இல்லாமல் சுத்தமாக இருக்க வேண்டும். எண்ணெயை அலுமினிய பாத்திரங்களில் விளிம்பு வரை இருக்கத்தக்கதாக சேமிப்பு வைக்க வேண்டும்.

Leave a Reply