பார்த்தீனியச் செடிகளை எளிய முறையில் இயற்கை உரமாக மாற்றலாம்

வெளிநாடுகளில் இருந்து நம் நாட்டிற்கு பரவிய பார்த்தீனியம் களை, முதன்முதலாக 1956-ஆம் ஆண்டு மகாராஷ்டிராவில் தான் கண்டறியப்பட்டது. தற்போது அனைவருக்கும் பிரச்னையை ஏற்படுத்தும் இந்த பார்த்தீனியம், திரும்பும் இடமெல்லாம் பெருகியுள்ளது.
11.5 மீட்டர் உயரம் வரை வளரக்கூடிய இந்த களைச்செடியின் இலைகள் பார்ப்பதற்கு காரட் இலைகளைப் போன்று காணப்படுவதுடன் இவை கிளைவிட்டு பூக்கும் இனத்தைச் சார்ந்தவையாகும். மேலும், நமது சாகுபடி பயிருடன் ஒப்பிடுகையில் இவை ஒவ்வொன்றும் 15,000 முதல் 25,000 விதைகளை உற்பத்தி செய்யும் தன்மை கொண்டது.
மேலும், இவ்விதைகளின் எடை மிகக் குறைவாக இருப்பதால் இவை எளிதில் காற்றின் மூலமாகவும், மனித மற்றும் விலங்குகள் செயல்பாட்டின் மூலமாகவும் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எளிதில் பரவிச் செல்கிறது. இந்த களைச்செடியின் வெட்டப்பட்ட மற்றும் உடைந்த பாகங்கள் மீண்டும் துளிர்விடும் தன்மை கொண்டதாக இருப்பதால் இவை எளிதில் பரவி விடுகின்றன. இவ்வாறு பரவும் இவ்வகை களைச் செடிகள் மனிதன் மற்றும் விலங்கினங்களுக்கு ஒவ்வாமை, சுவாசக் கோளாறுகள் போன்ற நோய்களை ஏற்படுத்துவதால் இதனை முழுமையாக கட்டுப்படுத்துவது மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.
பல்வேறு தொழில்நுட்பங்கள் வளர்ந்துவரும் இந்தச் சூழ்நிலையிலும் இந்த களைக் கட்டுப்பாடானது உலகளவில் பெரும் சவாலாக இருப்பதுடன் தனிப்பட்ட மேலாண்மை முறைகள் மூலமாக இக்களைகளைக் கட்டுப்படுத்துவது என்பது எளிதான ஒன்றல்ல. எனவே, பல்வேறு மேலாண்மை முறைகளை ஒருங்கிணைத்து கடைப்பிடிப்பதால் இக் களையின் பரவலாக்கத்தைக் கட்டுப்படுத்தலாம்.
இயந்திரவியல் களைக்கட்டுப்பாடு: பெரும்பாலும் இந்த களைச் செடியானது விதைகளின் மூலமாக பரவுவதால், அந்தந்தப் பருவகாலங்களில் இச்செடிகள் பூப்பதற்கு முன் வேருடன் களைய வேண்டும். மேலும் இவை மனிதனுக்கு உடல் நலப் பிரச்னைகளை ஏற்படுத்துவதால் தகுந்த பாதுகாப்பு முறைகள் மூலமாக (கையுறைகள், முகக் கவசங்கள்) அகற்றப்பட வேண்டும். மேலும் பொது இடங்களில் மக்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து இச் செடிகளை பூப்பதற்கு முன் நீக்குவதால் இவை மேலும் பரவாமல் தடுக்கலாம்.
உழவியல் முறைகள்: பார்த்தீனிய களைகள் அதிகமாக உள்ள விளை நிலங்களில், அதனைவிட வேகமாக வளரும் பயிர்களான சோளம், கம்பு, சணம்பு, தக்கைப் பூண்டு போன்றவற்றை பயிரிடுவதால் இதன் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தலாம். இச் செடிகள் பூப்பதற்கு முன், விளைநிலங்களில் நீரைப் பாய்ச்சி மடக்கி உழுவதன் மூலமாக இதனைக் கட்டுப்படுத்துவதோடு, மண்ணிற்கு உரமாகவும் பயன் படுத்தலாம்.
பெரிய அளவில் இதை குப்பைகளுடன் குழியில் புதைத்து மட்கு உரம் தயாரித்து பயன்படுத்தலாம். இதை அணைத்து வகையான பயிர்களுக்கும் உகந்தது.