தென்னையில் ஊட்டச்சத்து மேலாண்மை

தென்னையின் வளர்ச்சிக்கும் அதன் விளைச்சலுக்கும் பேரூட்டகங்கள் மற்றும் நுண்ணூட்டகங்கள் பெரிதும் உதவுகின்றன. தென்னையில் காணப்படும் ஒவ்வொரு சத்துக்களின் குறைகளும் அதன் நிவர்த்திகளைப் பற்றியும் காண்போம்.

Courtesy: Dinamalar

 

 

 

 

 
தழைச்சத்து :

 • தென்னை மரத்தின் வளர்ச் சியை ஊக்குவிக்கின்றது.
 • பெண் பூக்கள் உற்பத்தியாவதற்கு பெரும் பங்கு வகிக்கின்றது.
 • இதன் பற்றாக்குறையால் தென்னை மரத்தின் வளர்ச்சியை பாதித்து இளம் மற்றும் முதிர்ந்த இலைகள் மஞ்சள் நிறமாகின்றன.
 • தென்னையில் 14வது இலையில் இதன் அளவு 1.8-2.0 விழுக்காடு இருக்க வேண்டும்.

மணிச்சத்து :

 • தென்னை மரத்தின் அடித்தண்டு பருமனாவதற்கு பயன்படுகிறது.
 • மண் ணில் இதன் பற்றாக்குறையால் வேர்களின் வளர்ச்சியை பாதிக்கப்படுகின்றது.
 • மேலும் பூக்கள் உண்டாவதும், தேங்காய் முதிர்ச்சி அடைவதும் தாமதமாகும். தென்னை இலைகளில் மணிச்சத்து 0.12 விழுக்காடு இருக்க வேண்டும்.

சாம்பல் சத்து :

 • தேங்காயில் பருப்பு மற்றும் எண்ணெய்ச்சத்து உருவாகுவதற்கு பெரிதும் பயன்படுகிறது.
 • மேலும் அதிக காய்கள் பிடிப்பதற்கும் பருப்பு தடிமனாவதற்கும் உதவுகின்றது.
 • சாம்பல்சத்து மரத்திற்கு பூச்சிநோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கின்றது.
 • இதன் பற்றாக்குறை இலையில் ஆரஞ்சு நிற புள்ளிகள் அல்லது ஒளி ஊடுருவக்கூடிய சிறு வெளிரிய மஞ்சள் புள்ளிகள் போன்று தென்படும்.
 • சாம்பல் சத்து பற்றாக்குறை அதிகரிக்கும் நிலையில், மரத்தின் இலைகள் சிறுத்தும், வளர்ச்சி குன்றியும், நுனி சிறுத்தல் போல் காணப்படும்.

கால்சியம் :

 • தண்டு மற்றும் இலைகளின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகின்றது. பொதுவாக இதன் குறைபாடு நெட்டை தென்னை ரகத்தில் காணப்படுவதில்லை.
 • ஆனால் குட்டை ரக தென்னை மரங்கள் இதன் குறைபாடு தென்படுகிறது.
 • தென்னையில் 14-ம் இலையில் இதன் அளவு 0.30.-0.40 விழுக்காடு இருப்பது வளர்ச்சிக்கு உகந்தது.
 • தென்னை மரத்திற்கு கால்சியம் அடங்கிய உரங்களான சூப்பர் பாஸ்பேட் மற்றும் ராக்பாஸ்பேட் இடுவதன் மூலம் இதன் தேவையை பூர்த்தி செய்யலாம்.

மெக்னீசியம் :

 • நெட்டை இரகங்களை விட குட்டை தென்னை இரகங்கள் மெக்னீசிய பற்றாக்குறை அறிகுறிகளை வெளிப்படுத்துகின்றது.
 • பற்றாக்குறையால் அடி இலைகள் மஞ்சளாக மாறும். மர வளர்ச்சிக்கு தென்னையின் 14-வது இலையில் 0.24 விழுக்காடு மெக்னீசியம் அவசியம்.
 • மெக்னீசியம் சத்து குறைபாட்டிற்கு மரம் ஒன்றுக்கு ஆண்டிற்கு 500 கிராம் மெக்னீசியம் சல்பேட் இட வேண்டும்.
 • சமமாகப் பிரித்து ஆறு மாதத்திற்கு 250 கிராம் வீதம் இடவேண்டும்.

கந்தகம் :

 • தென்னை இலையில் கந்தகத்தின் அளவு 0.12 விழுக்காடு கீழே இருக்கும்பொழுது இதன் குறைபாடு மரத்தில் தென்படுகிறது.
 • ஆகவே, இதன் உகந்தநிலை 0.12லிருந்து 0.19 விழுக்காடு வரை இருப்பது மர வளர்ச்சிக்கு ஏற்றது. இலைகள் இளம் மஞ்சள் நிறமாக மாறும். மேலும் பருப்பின் அடர்த்தி குறைந்து திடமாக இருக்காது.

துத்தநாகம் :

 • இதன் பற்றாக்குறையால் தென்னையில் இலைகள் சிறுத்தும் உருமாறியும் தென்படும். இதன் குறைபாட்டினை தவிர்க்க ஆண்டிற்கு மரம் ஒன்றிற்கு 500 கிராம் துத்தநாக சல்பேட் இட வேண்டும்.

போரான் :

 • பாளையில் உற்பத்திற்கும் மகரந்தம் முளைப்பதற்கும் போரான் பெரிதும் உதவுகின்றது. இதன் பற்றாக்குறை மரத்தின் திசுவளர்ச்சியை பாதிக்கின்றது.
 • மேலும் இலைகள் நீளமாக வளர்வது தடைப்பட்டு இலைகளின் நுனி மடங்கியும், “V’ வடிவத்திலும் தோன்றும். மரத்தில் குருத்து இலைகள் பிரியாமல் ஒன்றோடு ஒன்று இணைந்து காணப்படும். தேங்காய்கள் முதிர்ச்சி அடைவதற்கு முன் கீழே விழுந்துவிடும்.
 • போரான் 10லிருந்து 13பிபிஎம் வரை 14வது இலையில் இருப்பது தென்னை வளர்ச்சிக்கு உகந்ததாகும். இதன் பற்றாக்குறையை நீக்க மரம் ஒன்றிற்கு போராக்ஸ் 200 கிராம் இட வேண்டும்.

எரு மற்றும் உரம் இடுதல் :

 • நெட்டை ரக தென்னைக்கு வருடத்திற்கு 1.2 கிலோ யூரியாவும், 2 கிலோ சூப்பர் பாஸ்பேட்டும், 2 கிலோ மூரியேட் ஆப் பொட்டாஷ் உரமும், 50 கிலோ தொழுஉரமும் மற்றும் 1 கிலோ வேப்பம் புண்ணாக்கும் இடவேண்டும்.
 • வீரிய ஒட்டு ரக தென்னைக்கு வருடத்திற்கு 2.25 கிலோ யூரியாவும், 1.5 கிலோ சூப்பர் பாஸ்பேட், 3.00 கிலோ மூரியேட் ஆப் பொட்டாஷ் 50 கிலோ தொழுஉரம் மற்றும் 2 கிலோ வேப்பம் புண்ணாக்கு இட வேண்டும்.
 • மேற்குறிப்பிட்ட உர அளவுகளில் முதல் ஆண்டு 1/4 பங்கும், இரண்டாம் ஆண்டு 1/2 பங்கும், மூன்றாம் ஆண்டு வயதுள்ள கன்றுகளுக்கு 3/4 பங்கும் இட வேண்டும். மொத்த உர அளவுகளை இரு சமமாகப் பிரித்து ஆடி மற்றும் மார்கழி – தை மாதங்களில் இட வேண்டும்.
 • மரத்தினை சுற்றிலும் எடுக்கப்பட்ட 6 அடி ஆரமுள்ள வட்டப்பாத்தியின் மேற்பரப்பில் எருவினையும் இரசாயன உரங்களையும் இட்டு மண்வெட்டியால் பொத்தி விட்டு பின்பு நீர்பாய்ச்சவும்.
 • தென்னை நுண்ணூட்ட கலவையினை ஒரு ஆண்டிற்கு 1 மரத்திற்கு 1 கிலோ வீதம் இட வேண்டும்.
 • அல்லது 200 மிலி தென்னை டானிக்கினை ஒரு மரத்திற்கு 6 மாதத்திற்கு ஒருமுறை வேர் மூலம் கட்டி செலுத்த வேண்டும். இவ்வாறு செய்வதால் குறும்பை உதிர்வது கட்டுப்படுத்தப்பட்டு மகசூல் அதிகரிக்கும்.
 • வட்டப்பாத்தியில் 100 கிராம் சணப்பினை விதைத்து பூக்கும் தருவாயில் அறுவடை செய்து வட்டப்பாத்தியில் இட வேண்டும்.
 • இவ்வாறு ஆண்டிற்கு மூன்று முறை செய்தால் தனியாக மரத்திற்கு 50 கிலோ தொழுஉரம் இடவேண்டிய அவசியம் இல்லை. இவ்வாறு செய்வதால் குரும்பை உதிர்வது கட்டுப்படுத்தப்பட்டு மகசூல் அதிகரிக்கும்.

கொ.பாலகிருஷ்ணன், துறைத் தலைவர், ப. மாசிலாமணி, பேராசிரியர்,
விதை நுட்ப அறிவியல் துறை,
மதுரை விவசாயக் கல்லூரி.

One thought on “தென்னையில் ஊட்டச்சத்து மேலாண்மை

Leave a Reply