கோவையில் வீட்டுத்தோட்டம் அமைக்க மானியம்

கோவையில் நகர்ப்புற தோட்டக்கலை அபிவிருத்தி திட்டம் துவங்க விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம் என தோட்டக்கலை துணை இயக்குனர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

கோவை மாவட்டத்தில் நகர்ப்புறங்களில் வாழும் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான காய்கறிகளை பயிரிட்டுக் கொள்ள, தமிழக அரசு நகர்புற தோட்டக்கலை அபிவிருத்தி திட்டத்தை செயல்படுத்த உத்தரவிட்டுள்ளது. இத்திட்டம், தற்போது, கோவை மாவட்டத்தில் செயல்பாட்டில் உள்ளது.

காய்கறிகளை எளிய முறையில், வீட்டின் மேல்தளத்தில் வளர்ப்பது இத்திட்டத்தின் நோக்கம்.வீட்டின் மேல்தளத்தில் தோட்டம் அமைப்பதற்காக இடுபொருள் மற்றும் தொழில்நுட்ப கையேடு பயனாளிகளுக்கு, 50 சதவீத மானியத்தில், 1352 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது. வீட்டின் மேல்தளத்தில் தோட்டம் அமைக்க, 16 சதுர மீட்டர் இடம் போதுமானது.

இத்திட்டத்தை செயல்படுத்தும் ஆர்வலர்களுக்கு, 10 வகையான காய்கறி விதைகள் வழங்கப்படுகின்றன. இத்துடன் காய்கறி செடிகளை வளர்ப்பதற்கு தென்னை நார் கழிவு கட்டியுடன் கூடிய 20 பாலித்தீன் பைகள் வழங்கப்படுகின்றன. இவை எடை குறைவாகவும், கையாளுவதற்கு எளிதாகவும் இருக்கும். தரையில் விரிக்கப்படும் பாலித்தீன் விரிப்புகள் வீட்டினுள் நீர்கசிவு ஏற்படாமல் தடுக்கிறது.இவற்றுடன் பிளாஸ்டிக் கைத்தெளிப்பான், பிளாஸ்டிக் பூவாளி, மண் அள்ளும் கருவி, மண் கிளறும் கருவி ஆகியனவும் வழங்கப்படுகிறது.

தற்போது கோவை மாநகரில் நான்கு வாகனங்கள் மூலம் இத்திட்டத்தின் இடுபொருள்கள் பயனாளிகளின் வீடுகளுக்கு நேரடியாக கொண்டு சேர்க்கப்படுகிறது. இத்திட்டத்தை துவக்க ஆர்வமுள்ள பொதுமக்கள் தோட்டக்கலை துணை இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

Leave a Reply