உரமில்லை… மருந்தில்லை… நீரில்லை ஆனாலும் விளையுது நெல்லு

பசிக்க பசிக்க கொடுத்தால் வயிறு கெடாது; வாழ்வும் கெடாது. நெல்லுக்கும் அப்படித் தான். கொடுக்க கொடுக்க தண்ணீரை குடித்துக் கொண்டே இருக்கும். ஆனால் அதையும் அவ்வப்போது காயவிட்டு தண்ணீர் காட்டினாலும் விளைச்சல் கிடைக்கும் என்கிறார் மதுரை மேற்கு ஒன்றியம் குலமங்கலத்தைச் சேர்ந்த விவசாயி செந்தில்.
ஐந்தாண்டுகளாக வானத்தை பார்த்து நெல்லைத் தூவி நஷ்டமில்லாமல் விவசாயம் செய்து வரும் அனுபவத்தை விளக்குகிறார்.
“”மாய்ந்து மாய்ந்து தொலி உழவு செய்து, நெல்லு நாற்று உருவாக்கி அதை எடுத்து நிலத்தில் நட்டு ஆட்கூலி கொடுத்து களையெடுத்து மருந்தடிச்சு அறுவடை செய்றதுக்குள்ள போதும் போதும்னு ஆயிடுது. நான் ராமநாதபுரத்திற்கு கதிர் அடிக்கும் இயந்திரத்தை கொண்டு செல்வேன். அங்கே மானாவாரியில் நெல் அறுவடையை தெரிந்து கொண்டேன். அதையும் செய்து பார்க்கலாம்னு முடிவு பண்ணினேன்.
விதையை ஊறவைக்கலை. புழுதி உழவு மட்டும் பண்ணி ஏக்கருக்கு 30 விதையை கைவாக்கில் தூவி விட்டேன். மறுபடியும் உழுதப்போ விதையெல்லாம் மெல்ல மண்ணுக்குள்ள மறைஞ்சுருச்சு. அடுத்து எப்ப மழை வருமோ அப்பத்தான் விதை முளைக்கும். சிலநேரம் 20 நாட்கள் கழிச்சு கூட விதை முளைக்கும். இந்த தரம் தூவின ஒரு வாரத்துல மழை வந்துருச்சு. அப்படியே நாற்றாக வளரும். விதைய நேரடியா வயல்ல விதைக்கறதால நாற்று உருவாக்குற அவசியமில்ல. அதுக்கு ஆட்கூலி, அப்புறம் நாற்றை நடுறதுக்கு ஆட்கூலி தேவையில்லை. அதேபோல அடியுரம், தொழுஉரம் எதுவும் போடல. எட்டு கிலோ உயிர் உரம் மட்டும் போட்டேன். யூரியா, பிற உரம் போடாததால செலவு குறைஞ்சுருச்சு. ரசாயன மருந்தடிக்கல. அந்த செலவும் குறைஞ்சது.
கையால தூவுறதால சில இடத்துல அடர்த்தியா நாற்று உருவாகும். அந்த மாதிரி நாற்றை மட்டும் பிடுங்கி எடுத்து இன்னொரு 30 சென்ட் இடத்துல நட்டேன். அது அறுவடைக்கு வர இன்னும் பத்து நாட்களாகும். இந்த முறையில் அக்ஷயா, சீரக சம்பா ரகங்களை சாகுபடி பண்றேன்.
மத்தவங்களோட நிலத்துல உள்ள நெல்லோட ஒப்பிட்டா என்வயல்ல இப்ப அறுவடைக்கு தயாரா நெல்மணிகள் முற்றி நிக்குது. மத்தவங்க நிலத்துல இன்னும் 20 நாளாகும். இங்க பெரியாறு பாசனம் இருந்தாலும் மானாவாரி முறையில மழையை நம்பி தான் விதை விதைச்சேன். மொத்தமே நாலுதரம் தண்ணி பாய்ச்சியிருக்கேன். மத்ததெல்லாம் மழைத்தண்ணி தான். மழையில்லாதப்ப மண்ணோட ஈரத்தை நம்பி வளருது. கைக்கு நட்டமில்லாம ஏக்கருக்கு 35 மூடை கிடைக்குது. விவசாய உதவி இயக்குனர் செல்வன் வந்து சன்னரக நெல்மணிகளை பார்த்துட்டு பாராட்டுனாரு.
ஒருபோக சாகுபடி பண்ற இடத்துல ரெண்டு போக சாகுபடி பண்றேன். இடையில உளுந்து, துவரை ஏதாவது போடுறேன்.
உரம்போட்டு, நாற்று நட்டு, மருந்தடிச்சு 50 மூடை கிடைக்குறதல இருக்கும் லாபம் 35 மூடையில தாராளமா கிடைக்குது. ரசாயனம் கலக்காத அரிசி உருவாக்குறதுல மனசுக்கும் சந்தோஷமா இருக்கு.”
இவரிடம் பேச 99435 15514.
எம்.எம்.ஜெயலெட்சுமி, மதுரை.

Leave a Reply