இயற்கை முறை நாவல் சாகுபடி

கொடைரோடு மெட்டூரை சேர்ந்த விவசாயி சி.ஐ.ஜெயக்குமார் ஒரு ஏக்கருக்கு நாவல்பழ சாகுபடி செய்தார். 96 மரங்கள் உள்ளன. சாதாரணமாக நாவல் மரங்கள் 30 முதல் 35 அடி வரை வளரும். அவர் ஆண்டுதோறும் கவாத்து செய்வதால் 15 அடி உயரமுள்ள செடிகளாக வளர்ந்துள்ளன. இயற்கை முறையில் உரமிடுகிறார். அசோஸ்பைரில்லம், ரைசோபியம், சூடோமோனாஸ், மாட்டு எலும்பு சாம்பல், பஞ்சகாவ்யம் போன்ற இயற்கை நுண்ணூட்ட சத்துகளை பயன்படுத்துகிறார். நோய் தாக்குதலை தவிர்க்க இஞ்சிச்சாறு, மஞ்சள் பொடியை பயன்படுத்துகிறார்.
நான்கு ஆண்டுகளில் இருந்து பழம் காய்க்கின்றன. ஒரு மரத்தில் 60 கிலோ வீதம் ஏக்கருக்கு 5.5 டன் கிடைக்கிறது. சாதாரணமாக ஒரு ஏக்கரில் 2 டன் மட்டுமே மகசூல் கிடைக்கும். பழம் 5 கிராம் மட்டுமே இருக்கும். பறிக்கும்போதே பாதி பழங்கள் சேதமாகிவிடும். இங்கு ஒரு பழம் 17 முதல் 20 கிராம் இருக்கிறது. உயரம் குறைவாக இருப்பதால் பழங்களை சேதமின்றி பறிக்கின்றனர்.
விவசாயி கூறியதாவது: ராஜமுந்திரியில் “ஜம்பு’ ரக நாவலை வாங்கி வந்து பயிரிட்டேன். ஒரு லட்சம் ரூபாய் மட்டுமே செலவானது. ஒவ்வொரு மரமும் 22க்கு 22 அடி இடைவெளி உள்ளது. அதிக தண்ணீர் தேவையில்லை. 15 நாட்களுக்கு ஒருமுறை பாய்ச்சுவேன். மே முதல் ஜூலை வரை பழங்களை பறிக்கிறோம்.
நாவல் மரத்தை பொறுத்தவரை ஒரு ஆண்டு நல்ல விளைச்சலும், அடுத்து ஆண்டு அதில் பாதி மட்டுமே கிடைக்கும். ஒரு கிலோ ரூ.150 க்கு விற்கிறோம். சென்னை பசுமை அங்காடிகளுக்கு அனுப்புகிறேன். எங்கள் பண்ணையில் “நாவல் ஜூஸ்’ தயாரிக்கிறோம். 700 மி.லி., ஜூஸ் பாட்டிலை ரூ.170 க்கு விற்கிறோம். ஆண்டிற்கு குறைந்தது ரூ.5 லட்சம் வரை லாபம் கிடைக்கும், என்றார். இவரை தொடர்பு கொள்ள- 98659 25193

Leave a Reply