மண் பரிசோதனை செய்யும் முறை

http://mmimages.maalaimalar.com/Articles/2014/Jun/da2fba74-1d3f-43fd-8d27-3876288c3d5b_S_secvpf.gif

விவசாயம் செழிக்கவும், மகசூல் அதிகரிக்கவும், மண்வளத்தை காக்கவும்,  விவசாயிகள் கண்டிப்பாக மண் பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும்.

விவசாயத்துக்கு அடிப்படைத் தேவைகளாக நிலவளம், நீர்வளம் அமைகின்றன. நிலத்தின் வளத்தை நிர்ணயிப்பதில் மண் பரிசோதனையே முக்கியமானதாகும். ஏன் என்றால் மண்ணின் ரசாயன குணங்களும், பயிருக்குக் கிடைக்கக் கூடிய சத்துக்களின் அளவையும் மண் பரிசோதனையின் மூலமாகவே அறிய முடியும். வயலுக்கு வயல் சத்துக்களின் அளவு வேறுபடுவதாலும், மண் பரிசோதனையின் மூலமே பயிருக்கு ஏற்ப சமச்சீர் உரத்தை பரிந்துரை செய்ய முடியும்.

மேலும் இவ்வகையில் குறைந்த செலவில் அதிக மகசூல் பெறுவதோடு அதிகப்படியான உரச்செலவையும் குறைக்கலாம்.

பரிசோதனையின் அவசியம்: மண்ணின் தன்மைகளைக் கண்டறிய, களர், உவர் மற்றும் அமில நிலங்களைக் கண்டறிந்து அவற்றை சீர்திருத்தவும், பயிருக்குக் கிடைக்ககூடிய சத்துக்களின் அளவை அறிந்து அதற்கேற்ப உரமிடவும் ஆகும்.

மண் மாதிரி எடுக்கும் குறியீடு: நிலத்தின் தன்மைக்கு ஏற்ப மணற்பாங்கான பகுதி கரிசல் மண் பகுதி, செம்மண் பகுதி ஆகியவற்றுக்கு மண் மாதிரியை தனித்தனியாக எடுக்க வேண்டும்.

வயலின் மேடான பகுதிக்கு தனியாகவும், தாழ்வானப் பகுதிக்கு தனியாகவும் மண்மாதிரி எடுக்க வேண்டும். ஒரே வயலின் முன்பு சாகுபடி செய்த பயிர், வேறுவேறாக இருந்தாலும், அதற்கேற்ப, தனித்தனியாக மண் மாதிரிகள் எடுக்க வேண்டும்.

மண் மாதிரி எடுக்கும் காலம்: பயிர் அறுவடை முடிந்த பின்னர், நிலத்தை அடுத்த பயிருக்கு தயார் செய்வதற்கு முன்பு, தற்போதுள்ள பயிருக்கு உரமிட்ட 3 மாதங்களுக்கு பிறகும் மாதிரி எடுக்கலாம்.

மண் மாதிரி எடுக்கத் தேவையான கருவிகள்: மண்வெட்டி, தட்டு அல்லது வாளி, துணிப்பை அல்லது பாலித்தீன் பை.

மண் மாதிரி எடுக்கும்போது தவிர்க்க வேண்டிய இடங்கள்: எரு குவித்த இடங்கள், வரப்பு ஓரங்கள், மரங்கள் நிழல் படரும் பகுதிகள், நீர் கசிவு உள்ள இடங்கள்.

மண் மாதிரி எடுக்கும் ஆழம்: நெல், ராகி, கம்பு, கடலை, போன்ற குட்டை வேர் பயிர்கள்: 15 செமீ அல்லது 6 அங்குலம்.

பருத்தி,கரும்பு, மிளகாய், மரவள்ளி போன்ற ஆழமான வேர் பயிர்கள்: 22.5 செமீ அல்லது 9 அங்குலம்.

திராட்சை, மா, எலுமிச்சை, போன்ற பழத்தோட்ட மற்றும் தென்னை மரப்பயிர்கள்:  3 அடி ஆழத்துக்கு குழித் தோண்டி அதில் முதல் அடியில் ஒரு மாதிரியும், 2-வது அடியில் ஒரு மாதிரியும், 3-வது அடியில் ஒரு மாதிரியும் என 3 மண் மாதிரிகளை தனித்தனியாக எடுக்க வேண்டும்.

மண் மாதிரி எடுக்கும் முறை: மண் மாதிரி எடுக்க வேண்டிய இடத்தில் உள்ள இலை, சருகு, புல் முதலியவற்றை மேல் மண்ணை நீக்காமல் அப்புறப்படுத்த வேண்டும். சாகுபடி செய்யும் பயிரைப் பொறுத்து மேற்கூறிய ஆழத்துக்கு நிலத்தில் “வி’ வடிவத்தில் (மண்வெட்டியால்) குழிவெட்டி அந்த மண்ணை அப்புறப்படுத்த வேண்டும்.

வெட்டிய “வி’ வடிவ குழியின் ஓரமாக குழியின் மேலிருந்து கீழாக இரண்டு புறமும், ஓரே சீராக மண்வெட்டியால் ஒரு அங்குல கணத்துக்கு மண்ணை வெட்டி எடுத்து  சுத்தமான வாளியில் போட வேண்டும்.

ஒரு வயலில் இதே போன்று குறைந்தது 10 அல்லது 15 இடங்களில் மண்ணை சேகரித்து ஒன்றாகக் கலந்து அதில் இருந்து அரை கிலோ மண்ணைப் பகுத்தல் முறையில் எடுத்து துணிப்பையில் இட்டு பரிசோதனைக்கு அனுப்ப வேண்டும்.

மண் மாதிரியுடன் அனுப்ப வேண்டிய விவரங்கள்: பெயர், முகவரி, நிலத்தின் பெயர், சர்வே எண், உர சிபாரிசு தேவைப்படும் பயிர் ரகம், மானாவரி, இறவை.

நுண்ணூட்டச்சத்து ஆய்வுக்கு மண் மாதிரிகள் சேகரிக்கும் முறை: நுண்ணூட்டச்சத்து ஆய்வு செய்ய மண்மாதிரி சேகரிக்கும் போது இரும்பாலான மண்வெட்டி, தட்டு போன்ற பொருள்களை தவிர்த்து, பிளாஸ்டிக், அல்லது வேறு உலோகங்களால் ஆன பொருள்களைக் கொண்டு மேலே குறிப்பிட்ட முறைகளையே பின்பற்றி மண் மாதிரிகளை சேகரித்து பாலித்தீன் பைகளில் நிரப்பி ஆய்வுக்கு அனுப்ப வேண்டும்.

மண்மாதிரி ஆய்வுக் கட்டணம்: பேரூட்டச் சத்து ஆய்வு-ரூ.10, நுண்ணூட்டச் சத்து ஆய்வு-ரூ.10.

பாசன நீர் ஆய்வு: நீர் இறைக்கும் மோட்டார் கருவியை 20 நிமிடம் ஓட்டவும். பின்பு ஒரு சுத்தமான கண்ணாடி அல்லது பாலிதீன் பாட்டிலை எடுத்துக் கொண்டு அதை நீர் மாதிரி எடுக்க வேண்டிய தண்ணீரால் நன்கு கழுவிய பின் அரை லிட்டர் அளவுக்கு பாசன நீர் மாதிரியை எடுத்து ஆய்வுக்கு தர வேண்டும். பாசன நீர் ஆய்வுக் கட்டணம் ரூ.20 ஆகும்.

மண்வள அட்டை: மண் ஆய்வு செய்து அடுத்த பயிர்களுக்கு மண் வள அட்டை மூலம் உரப்பரிந்துரைகள் வழங்கப்படுகின்றன. இந்த அட்டை மூன்று ஆண்டுகளுக்கு பொருந்தும்.

மண்வள அட்டையில் அளிக்கப்படும் பரிந்துரைகள்: களர், அமில மற்றும் உவர்நிலை கண்டறிந்து அதற்கேற்ப சீர்திருத்தங்கள், பரிந்துரைகள், சுண்ணாம்பு நிலை அறிந்து அதற்கேற்ப பரிந்துரை, சமச்சீர் உரமிடுதல் பரிந்துரைகள், இயற்கை உரப்பரிந்துரைகள், நுண்ணுயிர் மற்றும் நுண்ணூட்டச் சத்து பரிந்துரைகள், ஒருங்கிணைந்த உர நிர்வாகத்தின் மூலம் நீடித்த நிலையான வேளாண்மைக்கு வழிகாட்டல், பயிர் சுழற்சியில் இடம் பெறும் பயிர்களுக்கு உரப்பரிந்துரை.

மேலும் விவரங்களுக்கு அந்த மாவட்டத்தில் உள்ள மண் ஆய்வுக் கூடம் அல்லது நடமாடும் மண் ஆய்வுக் கூடத்தை விவசாயிகள் அணுகலாம்.

தங்கள் அருகாமையில் உள்ள மண் பரிசோதனை ஆய்வுக் கூடங்கள் மற்றும் அதன் முகவரிகள் பற்றி அறிந்துகொள்ள இந்த பக்கத்தை காணவும்.

Leave a Reply