வீட்டுத் தோட்டத்தைப்
பாதுகாப்பது எப்படி?

வீட்டுத் தோட்டங்களைப் பராமரிப்பது என்பது தனிக் கலை. காலையில் எழுந்து செடி, கொடிகளுக்குத் தண்ணீர் ஊற்றுவது மட்டும் பராமரிப்பு அல்ல. செடிகள் காயாமலும் வதங்காமலும் பார்த்துக் கொள்ளவும் வேண்டும்.

பூச்சு தொற்று ஏற்படாமல் கண்காணிக்க வேண்டும். இதற்குப் பல வழிமுறைகள் உள்ளன. இதுபற்றி வழிகாட்டுகிறார் தோட்டக்கலை வல்லுனர் அந்தோணி ராஜ்.

தொற்று தவிர்க்க..
‘’தோட்டத்தில் உள்ள செடிகளைக் குழந்தைகளைப் போலப் பராமரிக்க வேண்டும். அவற்றில் பூச்சி தொற்று ஏற்பட்டால் உடனடியாகப் பாதுகாப்பு நடவடிக்கையை எடுத்து விட வேண்டும்.

குறிப்பாகப் பல வீட்டுத் தோட்டத்தில் காணப்படும் செம்பருத்திச் செடிகளில் ‘மீலி பெக்’ என்ற பஞ்சு பூச்சி தாக்குதல் இருக்கும். இது பார்ப்பதற்கு வெள்ளை பொடி போல இருக்கும்.

இப்பூச்சி தாக்குதலில் இருந்து இச்செடிகளைக் காக்க ரோகர் அல்லது மாலத்தியான் ரசாயனப் பூச்சிக் கொல்லி மருந்துடன் வேப்ப எண்ணையைச் சரி சமமாக எடுத்துக் கொண்டு, ஒரு லிட்டர் தண்ணீருடன் கலந்து பூந்தூரலாய் ஸ்பிரே செய்ய வேண்டும்.

இந்தச் சிறிய ஸ்பிரே தோட்டப் பொருள்கள் விற்கப்படும் கடைகளில் கிடைக்கும்.

பொதுவாகக் குளிர் காலத்தில் செடிகளுக்கு ஒரு நாள் விட்டு ஒரு நாள் தண்ணீர் விட்டால் போதும். வாரம் ஒரு முறையேனும் செடியைச் சுற்றி அடி மண்ணைக் கொத்தி விட வேண்டும்.

மனிதனுக்கு நடைப்பயிற்சி போலக் கொத்திவிடுவதை வாரம் ஒரு முறை தொடர்ந்து செய்ய வேண்டும். இதனைச் செய்யாமல் தொடர்ந்து தண்ணீர் ஊற்றுவதால் பயன் ஒன்றும் இல்லை.

செடிகளைக் காக்கும் வேப்பம்
இயற்கை பூச்சிக் கொல்லியான வேப்ப எண்ணையை மாதம் ஒரு முறை அனைத்து வகைச் செடிகளிலும் தெளிக்க வேண்டும்.

வேப்ப இலைகளைச் சேமித்து நன்கு காய வைத்துத் தூள் செய்துகொள்ள வேண்டும். இந்தத் தூளைச் செடி ஒன்றுக்கு ஒரு பிடி வீதம் செடியின் வேர் பகுதியில் போட்டு நன்கு கொத்திவிட வேண்டும். இதுவே அடி உரமாகவும் பூச்சிக் கொல்லியாகவும் செயல்படும்.

வளர்ந்த ஒரு வயது செடிகளுக்கு மூன்று மாதத்திற்கு ஒரு முறை இயற்கை உரம் ஒரு பிடி போட வேண்டும்.

இரண்டு வயது செடிகளுக்கு இரண்டு மடங்கு உரம் தேவை.

இதே போலத்தான் தொட்டிச் செடிகளுக்கும் உரமிட்டுப் பராமரிக்க வேண்டும்.இதனால் செடிகளின் வளர்ச்சி சீராக இருக்கும்.


வீட்டுக்குள் செடிப் பராமரிப்பு
வீட்டுக்குள் (இண்டோர் பிளாண்ட்) வளர்க்கப்படும் செடிகளுக்குக் குறைவாகவே தண்ணீர் விட வேண்டும்.இச்செடிகளுக்குத் தண்ணீரை ஸ்பிரே செய்தால்கூடப் போதும். அதுகூட அச்செடிகளின் இலைகளில் உள்ளத் தூசியை நீக்குவதற்காகத்தான். வாரம் ஒரு முறை மிதமான சூரிய ஒளிபடுமாறு பால்கனியிலேயோ, வீட்டின் வெளியிலேயோ வைக்கலாம். இதற்கு முன் செடியின் அடி மண்ணைக் கிளறிக் கொத்தி விடவேண்டும். இதுவே தண்டுச் செடிகளாக இருந்தால், தண்டின் அடி பாகத்தில் மட்டுமே தண்ணீர் விட வேண்டும்.

இவற்றைப் பூச்சிகள் தாக்காமல் இருக்க வேப்ப எண்ணையை ஸ்பிரே செய்ய வேண்டும்.
மணி பிளாண்ட், வெற்றிலை, மிளகு, ஐபோமி, பிலோடாண்டிரன்ட் கோல்டு, பிலோடாண்டிரன்ட் செலம், கிரே ஐவி ஆகிய செடிகள் வீட்டிற்குள் வளரக் கூடியவை.

மேற்கூறிய வழிமுறைகளைப் பின்பற்றினால் வீட்டுத் தோட்டச் செடிகளும், வீட்டுக்குள் வளர்க்கப்படும் செடிகளும் எப்போதும் பொலிவாக இருக்கும் என்கிறார் அந்தோணி ராஜ்.

Leave a Reply