ஆடிப்பட்ட பயிர்களுக்கான விலை முன்னறிவிப்பு

ஆடிப்பட்டப் பயிர்களுக்கான விலை முன்னறிவிப்பை வேளாண் விற்பனைத் தகவல் மற்றும் வணிக ஊக்குவிப்பு மைய அலுவலகம் வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் மானாவாரிப் பயிர்களுக்கு ஆடிப் பட்டம் முக்கியமானது. தென் மேற்குப் பருவமழை இப்பட்டத்தின் உற்பத்தியை தீர்மானிக்கிறது. இந்த ஆண்டு பருவமழை இயல்புக்கு குறைவாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தானியப் பயிர்கள், எண்ணெய் வித்துப் பயிர்கள் மற்றும் காய்கறிகள் இப்பட்டத்தில் பயிரிடப்படும் முக்கியப் பயிர்கள். வேளாண்மை மற்றும் ஊரக மேம்பாடு ஆய்வு மையத்தில் இயங்கி வரும் வேளாண் விற்பனைத் தகவல் மற்றும் வணிக ஊக்குவிப்பு

மைய அலுவலகம் மக்காச்சோளம், சோளம், எள், நிலக்கடலை மற்றும் சின்ன வெங்காயம் ஆகிய பயிர்களுக்கு கீழ்க்கண்ட விலை முன்னறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.

 

மக்காச்சோளம்: அமெரிக்க வேளாண் துறை கணக்கின்படி 2014-15-ஆம் ஆண்டில் மக்காச்சோளத்தின் உற்பத்தி 979 மில்லியன் டன்களாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய அரசின் விவசாயத் துறையின் கணக்கீட்டின்படி 2014-15ஆம் ஆண்டில் மக்காச்சோளத்தின் உற்பத்தி 23 மில்லியன் டன்களாக இருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டைக்காட்டிலும் 2 சதவீதம் அதிகம்.

தமிழகத்தில் பெரம்பலூர், அரியலூர், கடலூர், திண்டுக்கல் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் மக்காச்சோளம் சாகுபடி செய்யப்படுகிறது. மக்காச்சோளத்தின் தற்போதைய விலை குவிண்டாலுக்கு ரூ.1,480. விலை உயரும் என்ற எதிப்பார்ப்பில், தைப்பட்டத்தில் விளைந்த 15,000 டன் மக்காச்சோளம் இருப்பில் உள்ளது. கர்நாடகா அரசு விவசாயிகளிடமிருந்து 7 லட்சம் டன் மக்காச்சோளத்தை கொள்முதல் செய்துள்ளது.

இதைத் தொடர்ந்து தற்போது இணைய ஒப்பந்தப்புள்ளி கோரும் எண்ணத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. மேலும், பீகாரிலிருந்து குவிண்டாலுக்கு ரூ.1,400 என்ற விலையில் அதிக வரத்து வந்து கொண்டிருப்பதால் விலை உயர வாய்ப்பின்றி தற்போதைய விலையே நிலவும் என்று கருதப்படுகிறது.

இம் மையம் கடந்த 20 ஆண்டுகளாக உடுமலைப்பேட்டை சந்தையில் நிலவிய விலை நிலவரத்தை ஆய்வு செய்தது. பொருளாதார மற்றும் வர்த்தக ஆய்வின்படி ஜுன் மாதம் மக்காச்சோளத்தின் விலை குவிண்டாலுக்கு ரூ.1,480 ஆகவும், பின் அறுவடை காலமான நவம்பரில் குவிண்டாலுக்கு ரூ.1,400-ஆக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

சோளம்: இந்தியாவில், சோளம் பயிரிடும் பரப்பு 1961 முதல் 2011 வரை 18.2 மில்லியன் எக்டரிலிருந்து 6.3 மில்லியன் எக்டராக குறைந்துள்ளது. மேலும் இதன் உற்பத்தி 8 மில்லியன் டன்களிலிருந்து 6 மில்லியன் டன்களாக குறைந்துள்ளது. ஆனால் உற்பத்தி திறன் எக்டருக்கு 440 கிலோவிலிருந்து 961 கிலோவாக உயர்ந்துள்ளது.

சோளத்தின் குறைந்த தேவை மற்றும் விலை குறைவால் கடந்த 10 ஆண்டுகளாக சோளம் பயிரிடும் பரப்பு 3 லட்சத்து 83 ஆயிரம் எக்டேரிலிருந்து 1 லட்சத்து 98 ஆயிரம் எக்டேராக குறைந்துள்ளது.

திருப்பூர் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் கடந்த 10 ஆண்டுகளாக நிலவிய சோளத்தின் விலைகளை ஆராய்ந்தது. சோளத்தின் தற்போதைய விலை கிலோவிற்கு ரூ.18.5 முதல் ரூ.19 வரை உள்ளது. சந்தை மற்றும் பொருளியல் ஆய்வுகளின் அடிப்படையில் அறுவடையின்போது கிலோவிற்கு ரூ.18-19 வரை இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

 

எள்: இந்தியாவில் எள் ஒரு முக்கிய எண்ணெய் வித்துப் பயிர். தமிழ்நாட்டில் ஆடிப்பட்டத்தில் பயிரிடப்படுகிறது. மேலும் இதன் உற்பத்தி, பருவநிலையைப் பொருத்துள்ளது.

இந்தியாவில் 2012-13-இல் கரீப் பருவத்தில் எள் உற்பத்தி 3.40 லட்சம் டன். இது 2013-14இல் சுமார் 3.50 லட்சம் டன். தமிழகத்தில் 2011-12-ஆம் ஆண்டு எள் 0.43 லட்சம் எக்டேரில் பயிரிடப்பட்டு 0.26 லட்சம் டன் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஈரோடு, கரூர், சேலம், கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருப்பூர், புதுக்கோட்டை மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் எள் பயிரிடப்படுகிறது.

கொல்கத்தா, குஜராத், ஆந்திரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் மற்றும் கர்நாடக மாநிலங்களிலிருந்து வியாபாரிகள் எள்ளைக் கொள்முதல் செய்கின்றனர். தமிழ்நாட்டில் பொதுவாக எள், தைப்பட்டம் மற்றும் ஆடிப்பட்டத்தில் பயிரிடப்படுகிறது.

பொதுவாக ஜூலை, ஆகஸ்டில் விதைக்கப்படும் எள் அக்டோபர் முதல் டிசம்பர் வரை சந்தைக்கு வருகிறது. தைப்பட்டத்தில் விதைக்கப்படும் எள் மார்ச்-ஏப்ரல் ஆகிய மாதங்களில் சந்தைக்கு வருகிறது. சிவகிரி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் கடந்த 14 ஆண்டுகள் நிலவிய சிவப்பு எள் விலைகளை ஆராய்ந்ததில் எள் அறுவடை செய்யப்படும் அக்டோபர் முதல் நவம்பர் மாதங்களில் ஒரு குவிண்டாலுக்கு ரூ.8,500 முதல் ரூ.8,700 வரை இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

 

நிலக்கடலை: உலகளவில் நிலக்கடலை ஒரு முக்கிய எண்ணெய் வித்துப் பயிர். சோயா, பனை எண்ணெய், சூரியகாந்தி, கடுகு போன்ற எண்ணெய் வித்துக்கள், நிலக்கடலை வித்துக்கள் மற்றும் எண்ணெய் விலைகளைப் பாதிக்கிறது.

இந்தியாவில் 2012-13ஆம் ஆண்டு கரீப் பருவத்தில் நிலக்கடலை உற்பத்தி 26.20 லட்சம் டன்னாகவும், 2013-14இல் சுமார் 47.15 லட்சம் டன்னாகவும் இருந்தது. குஜராத், ஆந்திரப் பிரதேசம், ராஜஸ்தான், கர்நாடகம், தமிழ்நாடு, மகாராஷ்டிரம்,

மத்தியப்பிரதேசம் மற்றும் ஒடிசா மாநிலங்கள் நிலக்கடலை உற்பத்தியில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. ஆடிப்பட்டத்தில் மானாவாரி நிலக்கடலை 65 சதவீதம் பயிரிடப்படுகிறது.

சேவூர் மற்றும் திண்டிவனம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் கடந்த 14 ஆண்டுகளாக நிலவிய நிலக்கடலை விலைகளை ஆய்வு செய்ததில் திருப்பூர், கோவை மாவட்டங்களில் அக்டோபர்- நவம்பர் மாதத்தில் அறுவடையின்போது நிலக்கடலை காய்க்கு ஒரு குவிண்டாலுக்கு ரூ.4,200 முதல் ரூ.4,300 வரை கிடைக்கும். திண்டிவனம் சந்தைப் பகுதியில் நிலக்கடலை விலை ஒரு குவிண்டாலுக்கு ரூ.3,500 முதல் ரூ.3,600 வரை இருக்கும்.

 

சின்ன வெங்காயம்: சின்ன வெங்காயம் லாபம் தரும் முக்கியப் பயிர்களில் ஒன்றாக கருதப்படுவதால் ஆண்டு முழுவதும் பயிரிடப்படுகிறது.

கடந்த ஆண்டு சின்ன வெங்காயம் கிலோவிற்கு ரூ.45 முதல் ரூ.80 வரை விற்கப்பட்டது. ஆனால், தற்போது தரமான சின்ன வெங்காயத்தின் பண்ணை விலை கிலோ ரூ.22 வரை விற்கப்படுகிறது. கடந்த ஆண்டில் நிலவிய அதிகபட்ச விலையினால் விவசாயிகள், சின்ன வெங்காய சாகுபடி பரப்பை அதிகரித்துள்ளனர். மேலும் இந்தாண்டு ஏற்றுமதியும் குறைவாகவே உள்ளது.

தற்போது தேனி, திண்டுக்கல் மற்றும் திருச்சி மாவட்டங்களிலிருந்து வரத்து உள்ளது. மேலும், கர்நாடகத்திலிருந்து துவங்கியுள்ள வரத்து செம்டம்பர் வரை நீடிக்கும். எனவே, அறுவடைக் காலமான செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களி ல் பண்டிகை மற்றும் தேவை அதிகரிப்பால் சின்ன வெங்காய விலை உயர வாய்ப்புள்ளது.

தமிழ்நாட்டில் கோ5 ரகத்தின் விட்டம் 27 மில்லி மீட்டருக்கு மேலேயும், வட்ட வடிவத்துடனும் மற்றும் இளஞ் சிவப்பு முதல் சிவப்பு நிறத்துடனும் உள்ளதால் இதற்கு நல்ல விலை கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். ஆய்வு முடிவுகளின்படி ஆடிப்பட்டத்தில் நடவு செய்தால் சின்ன வெங்காயத்திற்கு அறுவடை சமயத்தில் அதாவது செம்டம்பர் முதல் அக்டோபர் வரை, கிலோவுக்கு ரூ.22 முதல் ரூ.25 வரை விலை கிடைக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.